உடல் – வைரமுத்து

உடல்

உடம்புக்குத் தமிழன் ‘மெய்’ என்று பெயர் வைத்தான்.

உடம்பு என்பது ‘பொய்’ என்றும் அதை மறைத்து மங்கலம் பூசத்தான் அதை மெய் என்றார்கள் என்றும் தத்துவச்சண்டை செய்கிறவர்கள் மீது – ஞாயிற்றுக் கிழமையானால்கூட  நீதிமன்றம் திறந்து வழக்குத் தொடுக்கலாம்.

உடம்பை மெய் என்று சொன்னவன் வணங்கத்தக்கவன்;வாழ்க்கையை வாழச் சொன்னவன்.

உடம்பை வெறும் ‘கட்டை’ என்றும் ‘காற்றடைத்த பை’ என்றும் வேதாந்தம் பேசுகிற எவனும் உள்ளங்காலில் எறும்பு கடித்தால் உதராமலிருப்பதில்லை.

இது மண்ணுக்குப் போகிற தேகந்தானே என்று சலித்துக்கொள்கிற எவனும் தானே குழிவெட்டித் தன்மேல் மண்தள்ளிக் கொள்வதில்லை.’

போகும்போது அள்ளிக் கொண்டா போகப் போகிறோம்’ என்று அடிக்கடி சித்தர் தமிழ் பேசுகிற சிலருக்கு, கொடுத்தகடன் வராமல் கூடுவிட்டு ஆவி பிரிவதில்லை.

மெய் பொய் என்பது பொய்.
மரணம் வரைக்கும் மெய் என்பதே மெய்.

கர்ப்பத்தில் பிறக்கிற எதுவும் அல்லது உயிரிலிருந்து உற்பத்தியாகிற எதுவும் மரித்தே தீரவேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தை உயிருக்கு உணர்த்துவதே உடம்புதான்.

மனித குலத்தின் கலைகள் நாகரிகங்கள் எல்லாம் உடம்பின் துய்ப்பிலிருந்து உற்பத்தியானவைதாம்.

உடம்பு இருக்கும் வரைக்கும்தான் அனுபவம்.
உடம்பின் வழிதான் இன்பம்;
உடம்பின் வழிதான் ஞானம்;
உணவுச்சுவை என்பது நாவைக் கடக்கும் வரைக்கும்தான்;
உலகச்சுவை என்பது உடம்பு இருக்கும் வரைக்கும்தான்;

இந்த உடம்பைப் பேணுவது ஓர் உன்னதமான கலை என்பதை நம் சமூகம் முழுக்கவும் கண்டு கொள்ளவில்லை.

நிறைந்த வசதிகளால் நீரிழிவுகொண்டு ஒரு கூட்டமும் -அடிப்படைச் சத்துக்கள் இல்லாமல் ரத்தச் சோகை கொண்ட ஒரு கூட்டமும் -இத்தனை பெரிய வித்தியாசத்தில் இந்த மண்ணில்தான் இருக்கமுடியும்.

தேநீரே பானமாக – மாத்திரையே உணவாக – சிகரெட்டே சுவாசமாக வாழப் பழகிவிட்ட ஓர் இளைஞர் கூட்டம் முதலிரவிலேயே முதுமையடைந்து விடுகிறது.

உடல் உழைப்பை ஒதுக்கிவைத்து விட்டு, தங்கள் வாழ்க்கையில் பாதியை விஞ்ஞானக் கருவிகளுக்கு விவாகம் செய்து வைத்து விட்டதால் மனிதனின் தேக உறுப்புகள் தேய்ந்து கொண்டே வருகின்றன.

மனிதன் தன் உடம்பை எந்திரங்களுக்கு ஒப்படைத்துவிட்டான்.

தேகபலத்தை விட்டு இந்தத் தலைமுறையே மெல்லத் தள்ளித்தள்ளி போய்க் கொண்டிருக்கிறது.

இந்த மண்ணின் தட்ப வெப்பத்திற்கும் பூகோளத்திற்கும் ஏற்ற உணவு முறைகளை நம் முன்னோர்கள் திட்டவட்டமாகத் தீர்மானித்திருந்தார்கள்.
ஆனால் பழைய பரணகளைக் காலி செய்யும் அவசரத்தில் சில தங்கக் காசுகளையும் தவற விட்டுவிட்டோம்

நம் உடம்பில் எது குறைவு எது மிகுதி என்பதை ஒரு மாரடைப்பு வராமல் யாரும் சோதிப்பதில்லை.

கருவிகள் வளர்ந்திருக்கும் அளவுக்கு நமக்கின்னும் கருத்துக்கள் வளரவில்லை.

நம் அடிப்படையில் எங்கேயோ விரிசல் இருக்கிறது.
உடம்பை வளர்க்காத ஒரு தலைமுறை நாற்றங்காலில் பூச்சிவிழுந்த மாதிரி நசிந்தே போகும்.
உடம்பின் மீது திணிக்கப்பட்ட விரக்தித் தத்துவங்களை நாம் விரட்டியடிக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே உடம்பும் உண்மையென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த உடம்பைப் பிரபஞ்சத்தின் பிரதி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் என்பது வெறும் கற்பனைதான்; உடம்புதான் காரியம்.

– வைரமுத்து.

Education