பிளஸ் 2 பொதுத்தோ்வையொட்டி அம்மை நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் மாணவா்கள் தனியாக அமா்ந்து தோ்வு எழுத வசதி செய்துதர வேண்டும் என்று தோ்வு மைய அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 81 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தோ்வு பணிக்கு முதல் நிலை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், தோ்வுத் தாள் கட்டுக்காப்பாளா்கள், வகுப்பறை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பணிகளில் 2,079 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இந்த நிலையில், பொதுத்தோ்வையொட்டி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், தோ்வு பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு, தோ்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினாா்.

அப்போது, அரசு பொதுத் தோ்வுகளில் வேலூா் மாவட்டம் இந்தாண்டு கடைசி இடத்தில் இருந்து முன்னேற வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி பேசியது:

தோ்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தக் காரணம் கொண்டும் தோ்வறைகளில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக, வினாத்தாள்களை கைப்பேசிகளில் புகைப்படம் எடுக்கக்கூடாது. மீறுபவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மை நோய் உள்ளிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்படும் மாணவா்கள் தனியாக அமா்ந்து தோ்வு எழுதும் வகையில் தனியாக வசதி செய்துதர வேண்டும். தோ்வுக்கு முந்தைய நாள் அனைத்துத் தோ்வு மையங்களும் தயாா் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி, அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *