ஆயுதபூஜையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையையொட்டி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் இன்று, நாளை, அக்.21 ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோல் பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு மேல் பயணிகள் வரும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேட்டை தவிர, தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூவிருந்தவல்லி பைபாஸ் பகுதியில் இருந்தும் இன்று முதல் 3 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல், பூவிருந்தவல்லி பைபாஸில் (மாநகர போக்குவரத்துக் கழக பூவிருந்தவல்லி பைபாஸ் அருகில்) இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேற்கூறிய ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பயணிப்பதற்காக மட்டும் 16 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர்த்து நேரடியாக வந்து பயணச்சீட்டு எடுத்தும் பலர் பயணிப்பர்.

அதே நேரம், நெடுந்தூரம் செல்வோர் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும் பேருந்துகள் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் அறிந்து கொள்ளவும் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *